நேர்காணலை எதிர்கொள்ள எளிமையான சில வழிகள்
தளர்வாக சாய்ந்து கொள்வது:நமக்கு இப்படி செய்ய வேண்டும் என்ற உணர்விருப்பது தவிர்க்க இயலாதது தான்....
👤 தூரிகை கனகா, கோவை6 Nov 2016 12:13 PM IST
தளர்வாக சாய்ந்து கொள்வது:
நமக்கு இப்படி செய்ய வேண்டும் என்ற உணர்விருப்பது தவிர்க்க இயலாதது தான். அதற்காக சாய்ந்து கொள்ளாதீர்கள். அனைத்திற்க்கும் மேலாக முகஸ்துதிக்காக பேசாதீர்கள். அப்பட்டமான பொய்களை கூறாதீர்கள். மார்க் டெயின் அவர்களின் புகழ்பெற்ற கூற்றை போல் "உண்மையை சொல்வதற்கு மெனக்கெட வேண்டிய அவசியமில்லை". உங்கள் பொய்களை உங்களை பரிட்சிக்கும் அதிகாரிகள் எளிதில் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முன்னாள் நிறுவனத்தை குறை கூறாதீர்கள்:
உங்கள் முன்னாள் நிறுவனம் மீதும் முதலாளி மீதும் மிகுந்த மனவருத்தத்தில் இருக்கிறீர்களா…? மிகுந்த கோபத்தில் இருக்கிறீர்களா…? அதை காட்ட நேர்காணல் சரியான இடமல்ல. உங்கள் பதிலை நேர்காணல் செய்யும் அதிகாரி கூர்ந்த கவனத்துடன் கவனிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் பதிலை கொண்டே உங்களை குறித்த அபிப்ராயம் அவர்களுள் உருவாகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். கடந்த நிறுவனத்தை நீங்கள் குற்றம் சுமத்தி முடிக்கிற தருணத்தில் நேர்காணல் செய்வோரின் மனதில் ஓர் தவறான எண்ணம் உருவாகியிருக்கும். நேர்காணல், உங்கள் கடந்த நிறுவனத்தை குறித்தல்ல உங்களை குறித்து!!
கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்:
நீங்கள் உங்களையறியாமல் மரியாதையற்ற வார்த்தைகளை பிரயோகித்திருந்தால் மன்னிப்பு கேளுங்கள். பின்பு அதை மறந்துவிட்டு மீதமிருக்கும் நேர்காணலில் கவனம் செலுத்துங்கள். மரியாதையற்றதன்மை என்பது என்ன? அது மனிதருக்கு மனிதர் மாறுபடும் என்றாலும்… பொதுவான விதியென்பது பொருத்தமற்ற நகைச்சுவைகளை பகிர்வது தேவையற்ற வார்த்தைகளை பேசுவது. அடிப்படையில் கண்ணியமாகவும் பண்பாகவும் நடந்து கொள்வது போதுமானது நாம் அவர்களுடன் காபி குடிக்க உணவகத்தில் அமர்ந்திருக்கவில்லை. வாழ்வின் முக்கியமான தருணத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் அவசியம்.
புகார் சொல்லாதீர்கள்:
இன்றைய சூழலில் நீங்கள் சந்தித்த சவால்கள் குறித்து சொல்லுங்கள் என்பது பொதுவான கேள்வியாகிவிட்டது. காரணம் இன்றைய நிறுவனங்கள் நம் முந்தைய நிறுவனங்களுடன் நமக்கிருந்த உறவுகளை பரிசோதிக்க விரும்புகிறார்கள். நாம் நம்முடைய பலத்தை வெளிப்படுத்த எண்ணி மற்றவர்களை குறைகூறுவதோ, புகார் சொல்வதோ நிச்சயம் நமக்கு நன்மையை பெற்று தராது.
முழு விழிப்புணர்வுடன் இருங்கள்:
உங்கள் சுயவிபரகுறிப்பை குறித்த முழு விழிப்புணர்வுடன் இருங்கள். அதில் உங்கள் திறன்களாக குறிப்பிட்டுள்ளவைகளின் மீது முழு ஆளுமையுடன் இருங்கள். அதை குறித்து எழுப்பபடும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கூற முனைப்பாய் இருங்கள்.
அதீத உணர்வுகளை கட்டுபடுத்துங்கள்:
அதீத பதட்டத்துடன் இருக்காதீர்கள்… அது உங்களை நம்பிக்கையற்றவராக தோன்ற செய்யும். மிகுந்த நம்பிக்கையுடையவராகவும் காட்டி கொள்ளாதீர்கள் இது நீங்கள் இயல்பாக குழுவில் செயலாற்ற இயலுமா என்ற ஐயத்தை ஏற்படுத்தும்
ஒரு நேர்காணல் செல்லும் முன் அந்த நிறுவனம் குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்திருங்கள்… அது அந்நிறுவனத்தின் மீதான உங்கள் ஆர்வத்தை அவர்களுக்கு புலப்படுத்தும்.
-தூரிகை கனகா, கோவை
© 2017 - 2018 Copyright Digital Presense. All Rights reserved.
Designed by Hocalwire