களைகட்டும் தமிழக அரசியல் - மக்கள் நல கூட்டணி
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு, 'செக்' வைக்கும் விதமாக, தே.மு.தி.க.,...
👤 பிரதீப் கு15 March 2016 11:54 AM IST
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு, 'செக்' வைக்கும் விதமாக, தே.மு.தி.க., - மக்கள் நல கூட்டணியில் த.மா.கா.,வும் இணைந்தது. இந்த புதிய அணி, 20 சதவீத ஓட்டுக்கள் வரை அள்ளக்கூடும் என்பதால், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு, 'கிலி' ஏற்பட்டுள்ளது.
தமிழக தேர்தல்களில், எப்போதுமே, அ.தி.மு.க., - தி.மு.க., அணிகள் இடையே தான் போட்டி இருக்கும். மற்ற கட்சிகள் எல்லாம், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் அடைக்கலம் தேடிக் கொள்வது வழக்கம்.
விஜயகாந்தின் தே.மு.தி.க., வந்த பிறகு, இந்த நிலைமை மாறியது. 2006 சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், இக்கட்சி தனித்து போட்டியிட்டது. இதன் காரணமாக, அந்த தேர்தலில், மும்முனைப் போட்டி ஏற்பட்டது.
அப்போது, தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் - பா.ம.க., - இ.கம்யூ., - மா.கம்யூ., ஆகிய கட்சிகளும், அ.தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. அந்த தேர்தலில், முதல் முறையாக, எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. வெற்றி பெற்ற கட்சிகளும், சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் தான் முன்னிலை பெற்றன. எனினும், கூட்டணி கட்சிகளின் உதவியோடு, தி.மு.க., ஆட்சியை பிடித்தது.
தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்ற போதிலும், மூன்று தொகுதிகளில், 20 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை, அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர். 33 தொகுதிகளில், 10 - 20 சதவீதம் ஓட்டுக்களையும், 48 தொகுதிகளில், 7 - 10 சதவீதம் ஓட்டுக்களையும் பெற்றனர். 105 தொகுதிகளில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றனர்.அடுத்து வந்த, 2009 லோக்சபா தேர்தலிலும், இக்கட்சி தனித்து போட்டியிட்டது. தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்றன. அ.தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., - மா.கம்யூ., - இ.கம்யூ., - பா.ம.க., இடம்பெற்றன.
இந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 27 இடங்களிலும், அ.தி.மு.க., கூட்டணி, 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வால் வெற்றி பறிபோனதை உணர்ந்த அ.தி.மு.க., 2011 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்த்தது. இக்கூட்டணி, 203 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், கொங்கு முன்னேற்றக் கழகம், முஸ்லிம் லீக், மூவேந்தர்முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி இடம்பெற்றன. இக்கூட்டணி, 31 இடங்களில் வெற்றி பெற்றது.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற, தே.மு.தி.க., 41 இடங்களில் போட்டியிட்டு, 29 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே, கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., விலகியது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், முதன் முறையாக அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது. தி.மு.க., கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இடம்பெற்றன.
பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. இந்த தேர்தலில், பா.ஜ., கூட்டணி, 20 சதவீத ஓட்டுக்களை பிரித்ததால், தி.மு.க.,வால், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க., 37 இடங்களில் வெற்றி பெற்று, சாதனை படைத்தது.
எனவே, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு கொண்டு வர, தி.மு.க., கடுமையாக முயற்சித்தது. ஆனால் அக்கட்சி, மக்கள் நலக் கூட்டணியுடன் கை கோர்த்துள்ளது. மேலும், எப்போதும் இல்லாத அளவில், பா.ஜ., - பா.ம.க., போன்ற கட்சிகளும், தனித்து களம் இறங்குகின்றன. 2006 நிலைமை, மீண்டும் உருவாகி உள்ளது. அந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தற்போதும் அங்கு உள்ளது. ஆனால், பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லை. அதற்கு பதிலாக, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், முஸ்லிம் லீக் உட்பட பல சிறிய கட்சிகள் இணைந்துள்ளன.
அ.தி.மு.க., கூட்டணியில் அப்போதிருந்த கட்சிகள் எதுவும் இல்லை. 2006 தேர்தலில், தனித்து போட்டியிட்ட, தே.மு.தி.க.,வுடன், ம.தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள், இ.கம்யூ., - மா.கம்யூ., - த.மா.கா., இணைந்துள்ளன.
கடந்த, 2006 தேர்தலோடு ஒப்பிடுகையில், அ.தி.மு.க., கூட்டணி பலம் குறைந்துள்ளது. அந்த கூட்டணி, இரண்டு கட்சிகளையும், தி.மு.க., கூட்டணி, மூன்று கட்சிகளையும் இழந்துள்ளது. அதேநேரம், தே.மு.தி.க., உடன் ஐந்து கட்சிகள் சேர்ந்துள்ளன. இதன் காரணமாக, தே.மு.தி.க., - ம.ந.கூ., கூட்டணி பலம் கூடியுள்ளது.
'ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி பாடுபடும்' என்று சென்னையில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் விஜயகாந்த் உறுதியளித்தார்.
வைகோ பேசும்போது 'தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒரு கூட்டணி ஆட்சி அமைய போகிறது. விழிம்புநிலை மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அம்பேத்கர் கண்ட கனவு இந்த மே மாதத்தில் நினைவாக போகிறது. அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை வாரி இரைத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று மனபால் குடிக்கிறது. பா.ம.க.வும் தன் பங்குக்கு மத்திய அரசில் பல தவறான வழிகளில் சம்பாதித்த பணத்தை கொட்டுக்கிறது. இவை அனைத்தையும் தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணியை சேர்ந்த தொண்டர்கள் பசி நோக்கா, கண் துஞ்சாமல் உழைத்து முறியடியக்க வேண்டும். பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த அனைத்து வழிகளிலும் போராட வேண்டும். அனைத்துத்தரப்பு மக்களும் எதிர்பார்க்க கூடிய ஆட்சியை அமைக்க பாடுபடுவோம்.' என்றார்.
ஜி.கே.வாசன் பேசும்போது, ' அடித்தட்டு மக்களுக்கும் ஆட்சியில் பங்கு உண்டு என்பதை விஜயகாந்த் தலைமையில் நிரூபிக்கும் வெற்றி கூட்டணி இந்த கூட்டணி. தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று, இந்த தேர்தலில் வெற்றி பெற்று, 50 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று சிறப்புமிக்க கூட்டாச்சியை ஏற்படுத்தும் என்று வெற்றி கூட்டணி இந்த கூட்டணி என்பதை அம்பேத்கர் பிறந்தநாளில் சபதம் ஏற்போம்.' என்றார்.
பிரதீப் கு
© 2017 - 2018 Copyright Digital Presense. All Rights reserved.
Designed by Hocalwire