உலகின் மிகப் பிரபலமான ஓவியங்கள்
நீங்கள் ஒரு கலை ரசிகரா? நீங்கள் சரியான இடத்தில் தான் உள்ளீர்கள். கீழே உலகத்தின் மிகப் புகழ்பெற்ற...
👤 திவ்யா7 Nov 2016 11:38 AM IST
நீங்கள் ஒரு கலை ரசிகரா? நீங்கள் சரியான இடத்தில் தான் உள்ளீர்கள். கீழே உலகத்தின் மிகப் புகழ்பெற்ற ஓவியங்களில் சில உள்ளன. இந்த ஓவியங்கள் காலம் பல கடந்து கலாச்சாரங்கள் பல கடந்து வந்துள்ளன. ஆனால் இவை இப்போதும் பார்க்க பார்க்க பரவசத்தை அளிக்கின்றன.
1) மோனா லிசா (The Mona Lisa)
தனது மர்மமான புன்னகைக்கு பிரபலமான மோனா லிசா ஓவியம் - இத்தாலிய கலைஞர் லியோனார்டோ டா வின்சி என்ற மாபெரும் கலைஞரின் கைவண்ணம். மிகச் சில ஓவியங்களே இதைப்போல் திறனாய்வுக்கும், ஆராய்ச்சிகளுக்கும், தொன்மமாக்கத்துக்கும், நையாண்டிப் போலி உருவாக்கங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன. பல ஆராய்ச்சியாளர்கள் இன்னும் மோனா லிசாவின் புன்னகையின் மர்மம் பற்றி ஆய்வுகள் செய்தாலும், சரியான விடையை டா வின்சியால் மட்டுமே தரமுடியும் என்பதே நிதர்சனம்.
2) இறுதி இராவுணவு (The Last Supper)
இது லியோனார்டோ டா வின்சி 15 ஆம் நூற்றாண்டில் வரைந்த சுவர் ஓவியம் ஆகும். இந்த ஓவியம் வரைந்த முறைகளினாலும் மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளாலும் பல முறை புனரமைக்க பெற்றுள்ளது. இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்துறந்ததற்கு முந்திய இரவில் அவர்தம் சீடர்களோடு அருந்திய விருந்தை மையப்பொருளாக கொண்டுள்ள இந்த ஓவியம், இயேசு தனது சீடர்களில் ஒருவரே அவரை காட்டிக்கொடுப்பார் என்று பேசியபோது, ஒவ்வொரு சீடர்கள் கொடுத்துள்ள அதிர்வினை அழகாக சித்தரிக்கிறது.
3) கெர்னீக்கா (Guernica)
உலகப்புகழ் பெற்ற ஸ்பானிஷ் கலைஞர் பாப்லோ பிக்காசோ வரைந்த எண்ணெய் ஓவியம் இது ஆகும். கெர்னீக்கா என்ற ஸ்பெயின் நாட்டு கிராமத்தின் மீதான தாக்குதலையும், போரின் அவல நிலையையும், அப்பாவிப் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்ட துன்பத்தினையும் சித்தரிக்கும் நோக்கத்துடன் இவ்வோவியம் தீட்டப்பட்டது. இவ்வோவியம் சுருக்கமான உலக சுற்றுப்பயணத்தில் காண்பிக்கப்பட்டதோடல்லாமால், ஒரு சமாதான சின்னமாக திகழ்கிறது.
4) அலறல் (Scream)
1893ல் எட்வர்ட் மண்ச் அவர்களால் வரையப்பட்ட இந்த படம், ஒரு கொந்தளிப்பான ஆரஞ்சு வானத்தின் பின்னணியில், வலியால் துடிக்கும் ஒரு உருவத்தை சித்தரிக்கிறது. அவருடைய தோழர்கள் அவரை தனியாக விட்டு சென்ற பிறகு, அவருடைய அலறல் அனுபவத்தை அடிப்படையாக கொண்டது. இந்த ஓவியம் பல முறை திருடப்பட்டள்ளது மிகவும் சுவாரஸ்யமான உண்மை.
5) விண்மீன்கள் நிறைந்த இரவு (The Starry Night)
புகழ்பெற்ற டச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோ அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த கேன்வாஸ் வகை எண்ணெய் ஓவியம், தன்னுடைய வீட்டுப் பலகணிக்கு வெளியே இரவில் தெரிந்த அற்புத காட்சியைச் சித்தரிக்கிறது. இந்த ஓவியம் வான் கோ படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பாக கருதப்படுகிறது.
திவ்யா
© 2017 - 2018 Copyright Digital Presense. All Rights reserved.
Designed by Hocalwire