நூல் விமர்சனம் வைரங்கள் எனும் வைரம்
வைரங்கள் எனும் வைரம் சமீபத்தில் ஒரு குறுநாவல் படிக்க நேர்ந்தது. வைரங்கள் என்பது பேர். நீட்டி முழக்கி...
வைரங்கள் எனும் வைரம்
சமீபத்தில் ஒரு குறுநாவல் படிக்க நேர்ந்தது. வைரங்கள் என்பது பேர். நீட்டி முழக்கி ஒரு பெரிய நாவலாகியிருக்கக்கூடிய கதைக் களத்தை, சுருக்கி நெறுக்கி கொடுத்திருந்தார் அந்த எழுத்தாளர். மிகச் சில கதை மாந்தர்கள். ஏழைக் குடும்பம், பணத்தாசை பிடித்த ஜமீன், அவர்களின் கைக்கூலிகள் என பல பழகிப்போன கதையாக்கங்கள். அதையெல்லம் வைத்தே ஒரு அபார கதை சொல்லும் அனாயசம். ஒவ்வோரு வரியிலும், பொய்த்து போய்க்கொண்டிருக்கும் இந்த சமுகத்தின் மீதான அக்கறையுள்ள கோபம். ஆங்காங்கே துளிர்க்கும், தழைக்கும், பூக்கும் அன்பின், மனிதத்தின் பதிவிடல்கள் என நூறு பக்கங்களிலும் பல நூறு வண்ணங்கள்.
கல் குவாரி, டீக்கடை, சிறிய வீடு, மனோகரி விளையாடும் சிறு நிலம், வயற்காடு, ஜமீன் வீடு, பண்ணை வீடு, பேராசிரியர் வீடு, போலிஸ் ஸ்டேசன், கலெக்டர் அலுவலகம், புதிய பொட்டல், அதன் பின் சுனை இவை கதைத் தளங்கள். ஜொலிக்கும் கல், லாரி, புதுப்புடவை, கிழிந்த அரை பேண்ட், பழைய புடவை, புதிய சட்டை, சாராயம், லென்ஸ், மஞ்சள் டென்னிஸ் பந்து, டென்னிஸ் பேட், அது மாட்டியிருந்த ஆணி இவைக கதைக் கருவிகள்.
குடிகாரக் கணவன், ஏழை மனைவி, வாய் பேசாத மகள், லாரி டிரைவர், சின்ன ஜமீன், அவரின் தந்தை, புரொபசர், அவர் மகன், சின்னி, தோட்டக்கார தாத்தா, கலெக்டர் அலுவலகத்து ஆள், டைப்ரைட்டிங் தாத்தா, போலிஸ்காரர் இவர்கள் கதை மாந்தர்கள்.
இந்தக் கதையே ஒரு சிறிய வைரம் போலத்தான். வைரம் எப்படி, தன்னுள் விழும் சிறு ஒளியைக்கூட திரட்டி, பிரதிபலித்து ஒரு ஒளியாட்டம் ஆடுகிறதோ, அவ்வாறே, இந்தக் கதையின் மாந்தர்கள் வெகு சிலரே. இந்த உலகத்து மாந்தரையெல்லாம் இவர்களில் எவர் அச்சுக்குள்ளேனும் அடைத்து விடலாம். இவர்கள் மன வர்ணனைகளுள் எதோ ஒன்றில் தான் நம் மனநிலையும் பொருந்திப் போகும்.
குடும்ப உறவுகளின் சிக்கல், ஆற்றாமை, ஏழ்மை, சந்தர்ப்பவாதம், நட்பு, வெகுளித்தனம் என அகப்பொருட்களைப் பேசும் அதே வேளயில், ஏழைகளை ஏய்க்கும் அதிகார மட்டங்கள், பணபலம், பேராசை, உலக மயமாக்கல் என அகப்பொருள்களை வார்த்தெடுக்கும் புறப்பொருட்களையும் பேசுகிறது இந்நாவல்.
யார் ஆசிரியர், எந்த பதிப்பகம் என்ற தகவல்கள் ஏதும் தராமல் படிக்கச் சொல்கிறேனோ? அதான், வைரங்கள் என்று பேர் வைத்திருக்கிறாரே. வைரம் என்றால், தேடித்தான் கண்டுபிடித்தாகவேண்டும்.
பனிமனிதன் எனும் முகத்தில் அறையும் உண்மை
பனிமனிதன் சிறுவர் இலக்கியத்திற்கான படி. இது இவ்வளவு எளிமையாகத்தான் சொல்லப்பட முடியும். இதன் பின்னால் புதைபொருள் உள்ளது. எளிய வார்த்தைகளாலேயே அவை காண்பிக்கவும், மறைக்கவும் பட்டிருக்கின்றன. உன் வயதிற்கு ஏற்ப, பக்குவத்திற்கு ஏற்ப நீ இந்தக் கடலில் கால் நனைக்கலாம். கரையிலே இன்பம் கண்டு வீடு திரும்பலாம். ஆழ்கடலில் நீச்சல் புரியாலாம். இந்த எல்லாச் செய்கைகளிலும், கடல் தரும் இன்பம் ஒன்றுதான்.
இமாலைய பகுதியின் இயற்கை வர்ணனை, கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் மனிதவியல், கொஞ்சம் ஆன்மீகம் என ஒரு கலவையான நாவல். வியப்பு, தேடல், ஏக்கம், மகிழ்ச்சி, துக்கம் என கலவையான உணர்வுகளோடே நம்மை சூழ்ந்து கொள்ளும் கதை.
மனித உறவுகள் தொடங்கி சுற்றுச்சூழல் வரை பல வாழ்தளங்களில் பல கேள்விகளை முன்வைக்கிறது இந்த நூல். இன்றைய நம் வாழ்வு, நம் முன்னோர்கள் எடுத்த ஆயிரமாயிரம் முடிவுகளின் நீட்சி. மனித பரிணாம வரலாற்றில், நாம் நிறைய தெரிவுகளைச் செய்தே இன்றைய நிலையை, இந்தப் பாதையை, இந்த இடத்தை வந்தடைந்துள்ளோம். வேறு சில முடிவுகளை நம் மூதாதையர்கள் எடுத்திருந்தால், இந்த உலகம் வேறு மாதிரி இருந்திருக்கலாம். யாராவது, நம் பரிணாமத்தை ரீசெட் செய்தால், இத்தனை ஆண்டுகள் கழித்து, நாம் இதே இடத்தில் வந்து நிற்போமா என்பதே முக்கியமான கேள்வி. நாம் வேறு முடிவுகளால் வேறு உலகத்தை நிர்மானித்திருக்க முடியுமா?
மனிதனை தேடுவதற்கு, தெரிந்து கொள்வதற்கு, பனிமனிதனை தெரிந்து