Home » தமிழ் » சிலுவை மரணமும் புனித வெள்ளியும்: ஒரு வரலாற்றுப் பார்வை!

சிலுவை மரணமும் புனித வெள்ளியும்: ஒரு வரலாற்றுப் பார்வை!

வரலாற்றில் சிலுவை ஒரு அவமானத்தின் சின்னம்! கொடூர மரண தண்டனையின் சின்னம். உலக வரலாற்றில் சிலுவை மரணம்...

👤 Jhon Arockiasamy, Chennai14 April 2017 3:00 PM GMT
சிலுவை மரணமும் புனித வெள்ளியும்: ஒரு வரலாற்றுப் பார்வை!
Share Post
  • whatsapp
  • Telegram

வரலாற்றில் சிலுவை ஒரு அவமானத்தின் சின்னம்! கொடூர மரண தண்டனையின் சின்னம். உலக வரலாற்றில் சிலுவை மரணம் என்பது மரண தண்டனைகளின் உச்சக்கட்ட அவமான தண்டனை.

குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து கொல்லும் தண்டனை முறை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெர்சியா நாட்டினரால் அறிமுகம் செய்யப் பட்டதாக வரலாற்று ஆய்வுகளிலிருந்து அறிகிறோம். ரோமானியர்கள் இந்த தண்டனை முறையை பிற நாட்டு குற்றவாளிகளை தண்டிக்க
கி.மு. முதல் நூற்றாண்டு முதலே
பயன்படுத்தினர். குற்றவாளிகளை ஆணிகள் அல்லது கயிறுகளால் நேராக நடப் பட்ட கம்பத்தில் கட்டி தொங்கவிட்டு, மூச்சு திணறடித்து கொல்வதே இந்த தண்டனை முறை.

மேற்கத்திய நாடுகளில் துவக்கத்தில் தவறு செய்யும் அடிமைகளை கொலை செய்யவே இந்த தண்டனை பயன்படுத்தப்பட்டது என்பதும் வரலாறு. ஸபார்டகஸின் வரலாற்று கதையிலிருந்தும நாம் இதை தெரிந்து கொள்ளலாம்.பின்னர் கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களும், தேச துரோக செயல்களில் ஈடுபட்டவரும் சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டனர்.

இப்படி சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர்களின் உடல்கள், பொதுவாக அதிலேயே தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றை பறவைகள், எலிகள் போன்றவை கடித்து தின்னும். சிலுவை மரணம் வழங்கப்படும் இடம் எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் நிறைந்ததாகவே காட்சி அளிக்கும்.

இயேசுவும் ரோமானிய மன்னனுக்கு எதிராக தன்னை யூதரின் அரசன் என கூறிக்கொண்ட கலக்கார தேச துரோகி என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே சிலுவையில் அறையப்பட்டார்.

அவமானத்தின் சின்னமான சிலுவை இயேசு என்னும் புரட்சியாளன் ஒருவரால் புனிதப்படுத்தப்பட்டது. பிற்கால வரலாற்றில் ஒரு சில மேற்கத்திய நாடுகள் தங்கள் நாடுகளை எதிரிகளின் தாக்குதலிலிருந்தும் கைப்பற்றுதலிருந்தும் காத்துகொள்ள தொடுத்த உரிமைப் போர்களை கூட சிலுவைகளை ஏந்தி போரிட்டு 'சிலுவைப் போர்கள்' என அழைக்கபடும் அளவிற்கு அவமானத்தின் சின்னமாக இருந்த சிலுவை ஒரு புரட்சியாளனால் புனிதப்படுத்தப்பட்ட நாள் தான் புனித வெள்ளி!

இயேசு என்கிற மாபெரும் புரட்சியாளன் செய்த குற்றமென்ன? எதற்காக கொடூர சிலுவை மரண தண்டனை?

ரோமானிய பேரரசின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பாலஸ்தீன நாட்டில் பிறந்து வளர்ந்தவர் இயேசு.

தான் வாழ்ந்த யூத சமூகத்தில் நிலவிய அநீதிகளை சாடி ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமூக நீதிக்காக குரல் கொடுத்தார். கடவுளின் பெயரால் மக்களை அடக்கி ஆண்ட யூத சமயத் தலைவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். மக்கள் நடுவே மதிப்பு மிகுந்தவர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட அவர்களின் வெளிவேடத்தை மக்கள் மத்தியில் வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளே என அம்பலப்படுத்தினார். நல்லவர்களாக நடிக்கும் சமயத் தலைவர்களை மக்கள் பின்பற்ற வேண்டாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

மனித மாண்பை குலைக்கும் சட்ட ஒடுக்குமுறைகளை வன்மையாக கண்டித்தார். தன் தவ வலிமையால் பெற்றிருந்த வல்லமையால்
பாவிகளாக கருதப்பட்ட புறக்கணிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சுகம் அளித்து புதுவாழ்வு அளித்தார். இதன் காரணமாக இயேசுவை பின்தொடர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதை விரும்பாத யூத சமயத் தலைவர்கள் அவரை கொலை செய்ய வழி தேடினர்.

பாலஸ்தீன் நாடு ரோமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்நாட்டு மக்கள் அனைவரையும் யூத சமய குருக்களே நேரடியாக ஆட்சி செய்தனர்.

யூதர்களின் கோவில் இருந்த எருசலேம் உள்ளடங்கிய யூதேயா பகுதியை சமய குருக்கள் அடங்கிய தலைமைச் சங்கம் என்ற அமைப்பே ஆட்சி செய்தது. அங்கு வரி வசூல் செய்வது மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு மட்டுமே ஆளுநர் பிலாத்து என்பவரிடம் இருந்தது.

யூதர்களின் பாஸ்கா என்னும் விழாவுக்கு முந்தைய வியாழக்கிழமை இரவில் தான் இயேசு கைது செய்யப்பட்டார். பாஸ்கா விழா காலத்திலும் இரவு நேரத்திலும் ஒருவரை கைது செய்யக்கூடாது என்பது யூத சட்டம்.

ஆனால் மக்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் இயேசுவை கைது செய்வதற்காக, அவரது சீடரான யூதாசுக்கு பணம் கொடுத்து காட்டிக் கொடுக்க செய்து இயேசுவிடம் இரவு நேரத்தில் விசாரணை என சட்டத்துக்கு எதிரான மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய யூத தலைமைச் சங்கம் இயேசுவை கொலை செய்யும் நோக்கில்
தம்மை இறைமகன் என்றும் யூதர்களின் அரசன் என்றும் கூறியதாக குற்றம் சாட்டி அவரை ரோமானியருக்கு எதிரான கலகக்காரராக சித்தரித்தனர். சட்டம் ஒழுங்கு ரோமானியர் கையில் இருந்ததால், இயேசுவைக் கொலை செய்வதற்கான அனுமதியைப் பெற ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர்.

இயேசு மீது சுமத்தப்பட்ட குற்றம் பெரிதாக தெரியவில்லை என்பதால் அவரை விடுவிக்க பிலாத்து வழி தேடும் போது அவரை விடுதலை செய்தால் ரோமானிய மன்னன் சீசருக்கு நண்பராக இருக்க முடியாது என்ற மிரட்டல் மூலம் பிலாத்துவை அடிபணியச் செய்தனர் யூத சமயத் தலைவர்கள். அவர்களது ராஜதந்திரத்தால், குற்றமற்ற இயேசுவை ஒரு களவனைப்போல் சிலுவையில் அறைந்து கொல்வதற்கான தீர்ப்பை பெற்றனர். சாட்டையால் அடிக்கப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டு, அவமானச் சின்னமாய் சிலுவை சுமந்து கொண்டு கொல்கொதா என்கிற குன்றுக்கு சென்றார் இயேசு. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், கொலைக்களம் நோக்கி குறுக்கு கம்பத்தை சுமந்து செல்வார்கள். நேர் கம்பம் கொலைக்களத்தில் முன்னதாகவே நடப்பட்டிருக்கும். செல்வாக்குள்ள ஒரு சிலரை தவிர்த்து தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஆடையின்றி நிர்வாணமாகவே சிலுவையில் அறையப்பட்டனர்.அவர்களது உடல், கயிறுகள் மற்றும் ஆணிகளால் சிலுவையோடு பிணைக்கப்பட்டன.

முழு உடலின் எடையையும் சிலுவையில் அறையப்பட்டவர்களின் கைகளே தாங்கும் நிலை உருவாவதால், மூச்சுத்திணறலும், சோர்வும், நீரிழப்பும் ஏற்படுவதுடன் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். நிர்வாண நிலையில், நெஞ்சடைத்து, தாகம் ஏற்பட்டு, சாவுடன் போராடுவதே சிலுவை தண்டனையின் உச்சகட்ட வேதனை.

இத்தகைய கொடுமையான ரண வேதனைகளுக்கு மத்தியிலும் அனைத்தையும் அமைதியாக சகித்துக் கொண்ட அவதாரபுருஷனான புரட்சியாளன் இயேசு சிலுவையில் மரணிக்கும் முன்பு "தந்தையே இவர்களை மன்னியும்"என்று தன் எதிரிகளுக்காக கடவுளிடம் மன்றாடியதாக காண்கிறோம்.

இறைவனின் சித்தம் நிறைவேற தான் மனமுவந்து ஏற்றுக்கொண்டு வெள்ளியன்று தன் மனித மரணத்தால் புனிதமடையச்செய்த சிலுவை மரணத்தை நினைவு கூறும் நாள் தான் புனித வெள்ளி!

By Jhon Arockiasamy, Chennai

Tags